பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என்றார் பாரதியார்.
ஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..
கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது. அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது. இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...
பத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..
இப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..?இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.
ஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.மண முறிவிற்கான அடிப்படைக் காரணம் ·
ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.· சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.·
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. · கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.
உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.
முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.
கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும்.
அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்வையகம் இதுதானடா...
என்ற சினிமா பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒவையார். ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்...
அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா?
ஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா?
வேண்டாமே... விவாகரத்து...
டிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.
டிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.
14 comments:
நல்லதொரு இடுகை.... தொடர்புடைய அவனும் அவளும் மட்டுமே இதற்கு காரணமாக இருந்து விடுவதில்லை பெரும்பாலான நேரங்களில்.... சமூகத்தின் பங்களிப்பு நிறைய இருக்கிறது.....
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், உடற்பயிற்சி இப்படியான உரங்களை மானுடவியல் எனும் செடிக்கு இடும் நிலை வெகுவாகக் குறைந்து விட்டது....
அதற்கு காரணம் சமுதாயத்தில் எதிலும் வணிக ரீதியாகவே செயல்படுவதுதான்....ஊர் கூடித் தேர் இழுப்பதும், வீடு கூடி சுற்றம் சூழ அமர்வது என்பதெல்லாம் பழமை என்று கழட்டி விட்டது சமூகத்தின் பங்காளிகளான ஊட்கங்கள்.... :-0(
இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் பதிய வேண்டுகிறேன்.
நன்றி பழைமைபேசி.. தெளிவான கருத்துகள்.. முற்றிலும் சரியே.. வழி மொழிகிறேன்.
நன்றி புதுகை.. பதிவிடுகிறேன்..
நல்ல இடுகை தோழரே. உண்மையில் படித்தவர்களிடையேதான் இத்தகைய நிலை இன்று அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு தெரிந்தவர்களின் குடும்பத்தில் நடந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய நானும் சென்றிருந்தேன். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். எங்களின் சமாதானத்திற்கு பிறகு ஓரிரு மாதங்கள் ஒன்றாக இருந்தார்கள். பிறகு மீண்டும் பிரச்சினைகள். இவர்களைப் போன்றவர்களை என்ன செய்வது... அவர்களிடம் பேசியதிலிருந்து அவர்களுக்கள் முன்னணியில் நிற்பது ஈகோ- தான் என்பது தெரிகிறது. அடுத்த பிரச்சினை வீட்டு வேலைகளில் கணவன் பங்கெடுக்காதது. மீண்டும் சமாதானப்படுத்தியிருக்கிறோம். என்ன நடக்குமோ...
நன்றி அன்புமணி... விட்டு கொடுப்பது தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை என்ன செய்வது..
வாழ்க்கைகாக தான் வேலை. வேலைக்காக வாழ்க்கையையும் உதறி தள்ள எப்படி தான் மனம் வருகிறதோ..
புரிந்து கொள்வதை விட உதறி தள்ளுவது சுலபம் போலும்.. மனங்களை வெல்வது மிக மிக அரிது தான்..
வருகைக்கு நன்றி..
அருமையான அலசல். உண்மையே நீங்கள் எழுதி இருப்பது, இப்போது அநேகமாய்ப் பத்துக்கு ஒரு குடும்பத்தில் நடக்கும் விஷயமாகிப் போய்விட்டது. பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பும் அவர்களின் ஆசைத் தேடலும், பேராசையும், உல்லாச வாழ்வுக்கு ஆசைப் படும் மனமும் இதுக்குக் காரணம் என்று சொல்லலாம். குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெற்றோரே இன்று சீரழிவுக்கு முழுமுதல் காரணம் சில குடும்பங்களில் இது ஒரு மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை
நக்கீரனில் வந்ததோ?
இதுபோல கருத்து செறிவு
மிக்க இடுகைகளை காண்பது
அரிதாகிவிட்டது!!
பகிர்ந்தமைக்கு நன்றி பூச்சியாரே..
நன்றி கீதாமேடம்..
வருகை நன்றி கலையரசன்..
வண்ணத்துப்பூச்சியாரே,நல்லதொரு தேவையான பதிவு.தேவையானவர்கள் பார்க்கவேணும்.
புரிந்துகொள்வதும் விட்டுக்கொடுப்பதுமே அன்பான வாழ்க்கையாகிறது.
நன்றி ஹேமா. ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்..?? சுகம் தானே..?
அருமையான பதிவு!
\\முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..//
correct
Post a Comment