Saturday, May 29, 2010

வருங்கால இயக்குநர்களே !











இயக்குநர் ஆக வேண்டுமா..? என்ற பதிவின் தொடர்ச்சி..


ராஜா ராணி


முழுக்க முழுக்க சினிமா போன்றே எடுக்கப்பட்ட குறும்படம் என்று சொல்லலாம். பெட்டிங்கில் ஆவல் கொண்ட இளைஞன் சதீஷ் சீட்டு, கிரிக்கெட் பெட்டிங் என்று முழு பணத்தையும் தொலைக்கிறான். காதலி ஆசையாய் கொடுத்த மோதிரத்தையும் சீட்டாடி இழக்கிறான். இருந்த பணத்தையெல்லாம் இழந்ததுடன் கடன் வேறு. அதுவும் கந்து வட்டிக்காரன் ஒருவனிடம். ஒன்றரை லட்சம் வாங்கிய கடன் வட்டி குட்டி போட்டு பேரன் பேத்தியெல்லாம் எடுத்து இரண்டு வருடங்களில் எட்டு லட்சமாகிறது. காதலியுடன் இன்னும் திருமணத்திற்கு சில நாடகளே இருக்கும் நிலையில் நாளை காலை 11 மணிக்குள் முழு பணத்தையும் கட்ட சொல்லி கந்து வட்டிகாரன் ஆள் அனுப்புகிறான்.


செய்வதறியாது மிரண்டு போகிறான் சதீஷ். காதலி கீதா தன்னிடம் ஒரு லட்சம் தேறும் என்கிறாள். நகைகளை விற்றால் இன்னும் ஒன்றரை லட்சம் சேர்க்க முடியும் என்கிறாள். ஆனால் அதெல்லாம் இந்த கடனை அடைக்க போதாது ஒரே வழிதான் இருக்கு என்கிறான். வாழ்வோ சாவோ மீண்டும் ஒரே முறை சூதாட்டம், ஜெயித்தால் மொத்த கடனையும் அடைத்து விட்டு இனிமேல் அதை நினைத்து கூட பார்க்காமல் இனிமையாய் வாழ்வை தொடங்கலாம் என்று யோசனை கூறுகிறான். வேண்டுமானால் நீயும் கூட வா .. என் அருகே அமர்ந்து கொள். என்கிறான். கதை சூடு பிடிக்கிறது. கிளப்பில் ராஜா ராணி ஆட்டமும் ஆரம்பாகிறது.


முதல் ஆட்டத்தில் கணிசமான தொகையை இழக்கிறான். இன்னும் இருப்பது சில ஆயிரங்கள் மட்டுமே. காட்சிகளுடன் இசையும் அதிர வைக்கிறது. கடைசி ஆட்டத்தில் விட்ட பணத்தை அனைத்தையும் ஜெயித்து அளவில்லா சந்தோஷத்துடன் இருவரும் காரில் கிளம்புகின்றனர்.


இதற்கிடையே நாயனுக்கு சில நாட்களாக சூதாட்ட ஆர்வத்தால் மன நிம்மதியை இழந்து மருத்துவரை ஆலோசிக்கிறான். அவரும் இது கட்டு படுத்த படவேண்டும் இல்லாவிட்டால் Pathological gambling என்ற மனநோயாக மாற வாய்புண்டு என்கிறார். சூதாட்டத்தில் பணம் இரண்டாம் பட்சம் என்றும் எதிர்பாராமல் கிடைக்கும் வெற்றி அதில் வரும் த்ரில் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே போதையாக மாறி என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும் என்று கூறுவதை நினைவு படுத்தி கொண்டே காரை ஓட்டி வருகிறான்.


வரும் வழியில் வெயிலின் மிகுதியால் தர்பூசணி சாப்பிட காரை நிறுத்துகின்றனர். காதலி தனக்கு இரண்டு பீஸ் வேண்டும் என்கிறாள். இறங்கி போய் தர்பூசணியுடன் வந்து பார்த்தால் காதலி கீதாவை காரில் காணவில்லை. சற்று பயந்து போகிறான். தெருவோரம் வீலை சுழற்றி விட்டு காசு போட்டு சூதாட்டம நடக்க அங்கு பத்து ரூபாய் பெட்டிங் கட்டி கமான் கமான் என்று பதட்டத்தோடு நின்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான் சதீஷ். இத்துடன் ஒரு முழூநீள சஸ்பென்ஸ் திரைப்படத்தை பார்த்ததை போன்ற உணர்வுடன் பனிரெண்டு நிமிட குறும்படம் நிறைவடைகிறது.



நடிப்பு பாபி மற்றும் நீலிமாராணி. தொழில் முறை நடிகர்கள். இருவரின் மிகையில்லாத நேர்த்தியான நடிப்பும் அருமை. ஒளிப்பதிவு மணிகண்டன் வயது 28. முறைப்படி ஒளிபதிவை பயின்றவர். இசை ராஜேஷ் முருகேசன். சும்மா தூள் பறக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு காட்சியிலும் இந்த டீமின் உழைப்பு தெரிகிறது. இத்துடன் சவுண்ட் டிசைனிங், எடிட்டிங் என்று அனைத்திலும் நுண்ணிய தொழில் நுட்பம் தெரிகிறது. சில வாரங்களுக்கு முன் கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இப்படம் ஒளிபரப்பபட்டு பாராட்டு பெற்றது.





இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 27வயது இளைஞர். ஒரு சாப்ட்வேர் வல்லுநர். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் வேலையை உதறி தள்ளி விட்டு நண்பர்களுடன் இணைந்து இப்போது சென்னையில் "Stone Bench Creations" என்ற சினிமா கம்பெனியை துவக்கியுள்ளார். கைவசம் ஐந்து ஸ்கிரிப்ட்கள் உள்ளதாம். அதிரடி டீமூம் ரெடி. தயாரிப்பாளர் கிடைத்தால் ஜெயித்து காட்டுவோம் என்கிறார்.




பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் குறும்படங்கள் அனைத்தும் ஆழமாகவும் அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலர் எந்த பயிற்சியும் இல்லாமல் வெறும் கருத்தை வைத்து கொண்டு டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.




பாரதிராஜா காலம் போல கிழக்கே போகும் ரயிலை பிடித்து சென்னை வந்து சேர்ந்து சேவல் பண்ணைகளில் தங்குவது டீ காபி சிகரெட் வாங்கி கொடுத்து உதவி இயக்குனராவது என்பதெல்லாம் அந்த காலம்.




இப்போது நாம் மூன்றாவது தலைமுறையில் இருக்கிறோம். எனவே, சினிமாவுக்கு வர ஆசைப்படுபவர்கள் அதற்கென்று இருக்கும் கல்லூரிகளில் சேருங்கள். தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கருத்தை சொல்லுங்கள். அதற்கு இத்தகைய குறும்படங்கள் உங்களுக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும். வருங்கால இயக்குநர்களே ! கிளம்பும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.




டிஸ்கி: சூரிய கதிர் மே 16-31ல் வெளியான கட்டுரை.




இயக்குநர் ஆக வேண்டுமா?

ஒரு நிகழ்வை மிக குறுகிய நேரத்தில் அழுத்தமாகவும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் வெளிப்படுத்துவதுதான் குறும்படம். உலகம் முழுக்க குறும்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அளவிட முடியாத்து. உலகின் சிறந்த பல இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கியுள்ளார்கள். அந்த வகையில் சினிமா கனவுகளோடு குறும்படங்களை அளித்த சில இளம் படைப்பாளிகளை சூரிய கதிர் அறிமுகப்படுத்துகிறது.

அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்....





வைத்தீஸ்வரனுக்கு படிப்பு சரியா வராது. எட்டாம் வகுப்பு வரை வாத்தியாருக்கு கறிகுழம்பு வைத்து கொடுத்து கரெக்ட் செய்து பாசாகிவிடுகிறான். ஒன்பதாம் வகுப்பில் வந்தது பிரச்சினை. ஐயர் வாத்தியார். தட்டு தடுமாறி பள்ளி முடித்து கல்லூரியில் சரித்திரம் படிக்கிறான். மளிகை கடையில் பொட்டலம் கட்டுற வேலை. அதற்குள் கல்யாணம் வேறு. மனைவியோ இவனை செல்லாக்காசாக நினைக்கிறாள். சதா தனது அதிர்ஷ்டத்தை நினைத்து புலம்பியபடியே சைக்கிளில் இழுத்து இழுத்து மிதித்து கொண்டே பயணிக்கிறான். எதற்கு.. ? ஒரு லெட்டரை போஸ்ட் செய்ய...


மனைவி இவனுக்கு துரோகம் இழைக்கிறாள். பக்கத்து வீட்டு தண்டபாணி தன் மனைவிக்கு சைகை காண்பிப்பதையும் அதை அவள் ரசிப்பதையும் மீசையை நறுக்கியபடி முகக்கண்ணாடியில் கவனிக்கிறான் வைத்தீஸ்வரன். மனைவியை கொல்ல முடிவு செய்கிறான். அதற்கு தான் அந்த லெட்டர். என் மனைவியை கொலை செய்ய போகிறேன். நாளை காலை வந்து என்னை கைது செய்யுங்க.. என்று கடிதம் எழுதி அதை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தபாலில் சேர்த்து விட்டு மாலை முழுவதும் ஊர் சுற்றி அலைகிறான். இரவு வீடு வந்து சேருகிறான். காலை விடிகிறது. மனைவியை கொல்ல தருணம் பார்த்து காத்திருக்கிறான்.





அவள் வழக்கம் போல காலையில் கணவனை மதிக்காமலே நடந்து கொள்கிறாள். இவனோ மறைத்து வைத்த கத்தியுடன் காத்திருக்கிறான். குளிக்க போகிறாள். வைத்தீஸ்வரனும் பின்னாலேயே போகிறான். குளியறையில் நுழையும் முன் திடீரென்று திரும்பி துண்டை மற்ந்து வைத்து விட்டேன் .. எடுத்துட்டு வா என்று ஆணையிடுகிறாள்.அதிர்ச்சியில் சரி என்று கூனிக்குறுகி சென்று துண்டை எடுக்க போகிறான்.


வீல் என அலறல் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். பாத்ரூமில் சுவிட்சை போட்ட மனைவி மின்சாரம் பாய்ந்து இறந்து போய் கிடக்கிறாள். இப்போது அவனது அதிர்ஷடம் என்ன..?? கொலை செய்ய போவதாய் வாக்கு மூலமாக பதியபட்டு தபாலில் கிடக்கிறது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக வைத்தீஸ்வரன் மீது உள்ளது. அந்த தபாலை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஐந்து கிலோமீட்டர் சைக்கிளில் செல்ல ஆயத்தமாகிறான். என் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க.. என்று பொறுமியபடியே கதை முடிகிறது. அவனது வாழ்வே அந்த ஐந்து கிலோமீட்டரில் தான் உள்ளது..



கணவன் மனைவியாக நடித்த இருவரின் நடிப்பும் அருமை. மிகவும் யதார்த்தமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன். முறையாக திரைப்பட கல்லூரியில் சினிமா தொழில் நுட்பம் படித்தவர்.


சைக்கிளை ஒட்டியபடி வைத்தீஸ்வரன் நம்மிடம் பேசுவது போல நகைச்சுவை துள்ளலுடன் வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. அறிமுக காட்சியிலேயே என் பெயர் வைத்தீஸ்வரன்.. வைத்தின்னு சுருக்கமாக கூப்பிட கூட எனக்கு நண்பர்கள் யாரும் இல்லீங்க... என்று சொல்லும் போதே வைத்தீஸ்வரனிடம் பார்வையாளர்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது. மனைவியை பற்றி சொல்லும் போது அவள் பெயர் பாரதி. அவளுக்கு இந்த பெயரை வைத்திருக்கவே கூடாது. எட்டாவது பெயில் அதுவும் தமிழ்ல.. படிப்பில் அவள் படி தாண்டா பத்தினி என்ற வசனங்கள் ஆற்றலுடன் அருமை. ஒளிப்பதிவும் இசையும் நன்று கை கோர்த்து செல்கிறது. திரைக்கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய குறும்படம் இது. இந்த டீம் நிச்சயம் சினிமாவிலும் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.




டிஸ்கி1: ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டு கணனியும் அதை சரி செய்ய வந்தவரும் என்னை பாடாய் படுத்தி விட மானிட்டர் தவிர அனைத்தையும் மாற்றிவிட்டேன். இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

டிஸ்கி 2 : சூரிய கதிரில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி. மற்றொரு குறும்படபார்வையை நாளை பதிவிடுகிறேன்.