
இரண்டு வாரம் முன்பு நண்பர் முகிலை சந்திக்க கிழக்கு பதிப்பகம் போயிருந்தேன். அவர் எழுதிய மைசூர் மகாராஜா வெளியாகியது குறித்து நேரில் வாழ்த்தவும் அந்த புத்தகத்தை வாங்கவும் தான் சென்றிருந்தேன்.
அப்பதான் கண்ணில் பட்டது பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம்.
டேய் முருகா ! கல்லால அடிப்பேன். உடனே சூரியனை வரச்சொல்லு...
அடே பொறுக்கி பையா ! வள்ளி தெய்வானையோட இருக்குற சந்தோஷத்துல என்னை மறந்துடாதே...
போடா மயிராண்டி. எனக்கு ஒண்ணும் நஷ்டமில்ல.. இனிமே பணம் வந்தாத்தானே உனக்கு ஊர் முழுக்க கோயில் கட்ட முடியும்...
என்ற தேவரின் வாக்கியங்களும் மூன்று சிங்கங்களுடன் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் படத்துடன் அட்டை படமே The Constant Gardner opening shot போல மிரட்டியது... இப்படியெல்லாம் தமிழ் கடவுளாம் முருக கடவுளை அர்ச்சனை செய்தவரின் வாழ்க்கை வரலாறு என்று அறிந்ததும் வாங்கியும் விட்டேன்.
படிக்க ஆரம்பித்தவுடன் விடாது பற்றி கொண்டது விறு விறு தகவல்கள். எத்தனையோ வாழ்க்கை வரலாறுகளை படித்திருக்கிறேன். யார் வாழ்க்கை வரலாற்றையும் இப்படி விழுந்து விழுந்து சிரித்து ரசித்து படித்ததில்லை.. அவ்வளவு சுவாரசியம்.
அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது என்று வாழ்ந்து காட்டிய தேவருக்கு அசாத்திய நம்பிக்கையும் அவர் பட்ட கஷ்டங்களும் கோர்வையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் ஆங்கிலத்தில் சுருக்கமாக எம்.எம்.ஏ என்று கடவுளின் பெயர் ஒன்றை தனக்கு இனிஷியலாகவே அமைத்து கொண்டது முதல் அத்தனையும் ஆச்சரியமான தகவல்கள்.
குழந்தை மனசு, அயாராத உழைப்பு, விடாத தன்னம்பிகை, அதீத தொழில் பக்தி, வாரி வழங்கும் வள்ளல் தன்மை, வியாபார நேர்மை என தான் வணங்கும் ஆறு முக கடவுள் போலவே ஆறு தனித்திறமையுடன் வாழ்ந்து காட்டிய தேவரின் வாழ்க்கை வரலாற்றை அள்ள அள்ள குறையாமல் அருமையான தந்திருக்கிறார் பா. தீனதயாளன். இந்த புத்தகத்திற்கு இவரின் உழைப்பு மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நிகழ்வுகளையும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க முடியாது.
ஜீலை 7, 1955 உருவான தேவர் பிலிம்ஸில், தேவர் மூன்றை மட்டுமே தன் சினிமா வாழ்க்கையில் முதலீடாக செய்தார் என்று உறுதியாக சொல்ல முடியும்.. அது... எம்.ஜி.ஆர், முருகன், விலங்குகள்..
எம்.ஜி,ஆரால் தேவர் வளர்ந்தாரா..?? தேவரால் எம்.ஜி.ஆர் திரையுலக வெற்றிகளை கண்டாரா.. ?? இரண்டும் நிகழ்ந்தன. யாருமே அருகில் செல்ல முடியாத எம்.ஜி.ஆரை தனது அன்பால் கட்டி போட்டவர் தேவர்.

MGR வேறு சில படங்களுக்காக பல நாள் ஷீட்டிங் முடித்து சென்னை திரும்பிய அன்றே ராமச்சந்திரா, இன்னும் நாள் கடத்தாதே... உடனே வந்திடு,, இல்லாட்டி ஒரு கழுதை வைத்து கூட என்னால படம் எடுக்க முடியும் என்று எம்.ஜி.ஆரை டெலிபோனிலேயே மிரட்டியும் இருக்கிறார்,அதே சமயம் ஒரு நாள் ஷீட்டிங்கில் தன்னை காண வந்த விருந்தினர்களுக்கு கூல்டிரிங்ஸ் எடுத்து வர சொல்ல, அங்கே பாய்ஸ் யாரும் இல்லாத்தால் தானே அவர்களுக்கு கூல்டிரிங்ஸ் எடுத்து வந்ததை பார்த்து அனைத்தும் ஆச்சரிய பட்டது என்றால் அவர்களுக்குள்ள நட்பும் அன்பும் வார்த்தகளால் விவரிக்க முடியாத விஷயங்கள்..
ஏழை மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே எனது படங்கள்.. கதைய எளிமையா சொல்லுங்கடா.. என்று தன் தேவர் கதை இலாகாவையே பாடாய் படுத்தியவர். நான் நம்புறேன் ஆடு, மாடு பேசும் என்று என் முருகன் என்னை கைவிட மாட்டான் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க வைத்த கிம் கி டக்
எவ்வளவு சம்பளம் என்று எடுத்த எடுப்பிலேயே புல் மேமண்ட்.. டேட் இருக்கா.? இல்லையா? என்ன சொல்றே..?? என்று மிரட்டும் தயாரிப்பாளர் அவர். எவருக்காகவும் எதற்காகவும் காத்திராத தொழில் பக்தியும் முருக பக்தியும் கொண்ட அஞ்சா நெஞ்சன். முதல் அமாவாசை பூஜை மூணாவது அமாவசை படம் ரிலீஸ் என பூஜையன்றே ரிலீஸ் தேதியை கொடுக்கும் அவரது அசாத்திய நம்பிக்கை. அது நடந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். ரிப்பீட் ஷீட்டிங் என்பது தேவர் பிலிம்ஸ் அகராதியிலேயே கிடையாது.
கோலிவுட்டின் இடி அமீன் என்று வர்ணிக்கபட்ட தேவர், ஒரு ஒன் மேன் ஆர்மி. கத்தை கத்தையாய் மடியில் கட்டிய ரூபாய்களுடன் களத்தில் இறங்கி, வெற்றி.. வெற்றி தன் படத்தின் முதல் ஷாட் போல பல வெற்றிகளை குவித்த அசகாய சூரர். தோல்வியை கண்டு எள்ளளவும் மலைக்காது,, அடுத்து அடுத்து என்று ரிலே ரேஸ் போல ஒடி ஒடி படமெடுத்தவர். தேவர் படத்தில் நடிக்க புக் செய்பபட்டவர்களுக்கு படம் முடியும் வரை கொஞ்சம் ஃபீவர் ஓவரா இருந்த சீஸன் என்றால் அது மிகையில்லை...
லாஜிக்கா..?? இங்கே எல்லாம் மேஜிக்தான்டா... போட்ட பணத்தை எடுக்கணும் ஊரெங்கும் முருகனுக்கு கோயில் கட்டணும் அது மட்டும் தான் அவர் குறிக்கோள்.
ஒவ்வொரு பட வெற்றியிலும் பணத்தை அள்ளி அள்ளி தன் முருக பெருமானுக்காக ஆறு படை வீடுகளிலும் செலவு செயவதையே வழக்கமாக கொண்டவர். மருதமலையை ஏழாவது படையாக ஆக்கியே தீருவது என்று 1962 ம் ஆண்டு மருதமலை முழுவதும் மின்சார வசதி செய்து கொடுத்தார். அதுவும் தி.மு.க. வில் இருந்து கொண்டு சுவிட்ச் ஆன் செய்தவர் எம்.ஜி.ஆர் எல்லாமே தேவரின் நட்புக்காக.
கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையை தொடங்கி பணத்தை கத்தை கத்தையாய் மடியில் கட்டி கொண்டு சினிமா படம் எடுத்த கெட்ட வார்த்தை
முருக பக்தரின் வாழ்க்கை வரலாறு சிரித்து ரசித்து படிக்க வேண்டிய ஒரு தன்னம்பிக்கை டானிக்.
வடிவமைப்பும் அச்சும் அருமை. இன்னும் அதிக புகைப்படங்கள் இட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
வெளீயீடு: கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்:: பா. தீனதயாளன்.
பக்கங்கள்: 192
விலை: Rs:110/-
ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்.