நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.
இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.
முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.
பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.
பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}

புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.
பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.
காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.
ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.
டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.