Wednesday, April 14, 2010

வசந்தபாலனுடன்....


சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித்தெரு. ஒரு சில விமர்சனங்களும் உண்டு. ஆனால் ஒரு படைப்பை உருவாக்க்க அதுவும் முற்றிலும் வணிகம் சார்ந்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்ப்டத்தை தந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் சூரிய கதிருக்காக பேட்டியும் எடுத்ததில் மகிழ்ச்சியே. மிக மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் பேசினார்.


அங்காடித்தெருவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்.? எப்படி உருவானது..? இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது..? பின்னணி இசை குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன..? மனம் கவர்ந்த இயக்குநர்கள் யார்..? என்று பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை அளித்துள்ளார் இயக்குநர்.




ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில்
அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு.



சூரிய கதிர் ஏப் 16-30 இதழில் வசந்தபாலனின் பேட்டி வெளியாகியுள்ளது.


நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. விரைவில் பதிவேற்றுகிறேன்.


Wednesday, April 7, 2010

உதவி தேவை..


முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.


அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே


இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் நான்கு லட்சங்கள் வரை செலவாகும் என்று நண்பர் முகில் மூலம் அறிந்தேன். நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.


முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090


MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.


Friday, March 26, 2010

அங்காடித் தெரு.....






படம் முடிந்துவிட்டாலும், மிஷ்கினின் நந்தலாலாவை கிடப்பில் போட்ட மாதிரிதான், இந்தப் படத்தையும் மூலையில் போட்டு வைத்திருந்தார்கள ஐங்கரன் தயாரிப்பாளர்கள். காரணம் வரிசையாக அவர்களுக்கு விழுந்த அடி அப்படி..



நல்லவேளை பல மாதங்களாக எதிர்பார்த்த திரைப்படம் இப்போதுதாவது வெளியானது.



வெயில் பட இயக்குநர் என்பதாலும் வித்தியாசமான கதையை சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் சென்றேன். வசனம் ஜெயமோகன் Additional advantage. நம்பிக்கை வீண் போகவில்லை.


மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன் எப்போதும் பரப்பரப்பாகவும் பகட்டாகவும் இயங்கி கொண்டிருக்கும் ரங்கநாதன் தெரு. அதில் உள்ள மிரும்மாண்ட ஜவுளி மாளிகை செந்தில் முருகன் ஸ்டோர் என்று பெயர் பலகையுடன் காட்சியளிக்கும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவே கதைக்களம்.


ஆனால் அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை உரித்து ரங்கநாதன் தெருவிலேயே தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். அதற்கே முதலில் ராயல் சல்யூட்.



பள்ளியில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தந்தையின் அகால ம்ரணமும் குடும்ப சூழ்நிலையால் சென்னையில் வேலைக்கு வருகிறான் நாயகன். அவனுடன் சேர்ந்து கொண்டு கூடவே வரும் இன்னொரு நண்பன் (கனாகாலங்கள் தொலைகாட்சி தொடரில் நடித்த பாண்டி)


ஆடையில் படிந்த கறை போல கனவுகளை சுமந்து வரும் நாயகனுக்கு அங்கு வேலை பார்க்கும் பெண்ணுடன் காதல். அவர்கள் இருவரின் சிநேகம், காதல், இன்பம், சோகம், என்று ஒவ்வொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.


விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எப்படியெல்லாம் சென்னையை நோக்கி ஒடி வரும் கிராமத்தவர்களின் வாழ்க்கையில் அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதுடன் இருவரும் காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்தார்களே எனபதே மீதி கதை..


உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாய் பேசினாலே அடி என்று கொத்தடிமைகளாய் நடத்தாத குறையாய் முதலாளியும் மானேஜரும்.


கடுமையான வேலை நேரமில்லாத உழைப்பு சரியான உணவோ கழிப்பிட வசதிகள் கூட இல்லாத அறைகள் என்று மிக துல்லியமாக பதிவாக்கியிருக்கிறார்.


ஒரு காட்சியில் பாண்டி Dubai என்று போட்ட டி. ஷர்ட் அணிந்து வருகிறான். கட்டிட வேலைக்காக செல்லும் கடல் கடந்து செல்லும் அமீரக இந்தியர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமாக எனக்கு தோன்றியது. அமீரக நண்பர்களுக்கு இது நன்கு புரியும்.



மானேஜராக நடித்திருப்பது இயக்குநர் வெங்கடேஷ். அற்புதமான நடிப்பு. செவத்த மூதிகளாக என்று திட்டி கொண்டே வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை பலப்படுத்துகிறார்.


முதலாளியாக பழ.கருப்பையா.. இயக்குநர் மணிரத்னம் அக்னி நட்சத்திரத்தில் உமாபதியை தேர்ந்தெடுத்தது போன்று மிகச்சிறந்த தேர்வு.


நாயகன் அறிமுகம் மகேஷ். பாதி காதல் பரத் போலவும் கொஞ்சம் கல்லூரி திரைப்படத்தில் நடித்த பையனையும் போலவும் இருக்கிறார். நடிப்பு அருமை. கதாநாயகியாக அஞ்சலி மற்றும் உடன் நடிக்கும் சிறு சிறு பாத்திரங்கள் அனைவரும் யதார்த்தமான நடிப்பால் கவருகின்றனர். இயக்குநர் நன்கு வேலை வாங்கி இருப்பது தெரிகிறது.


அஞ்சலி உடம்பால் நடிக்காமல் கண்களாலேயே நடித்து கவருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் ரேவதி, நதியா வரிசையில் நிச்சயம் இடமுண்டு.


ஒளிப்பதிவு ரிச்சர்ட். அமைதியான கிராமிய சூழ்நிலையிலிருந்து படபடக்கும் ரங்கநாதன் தெருவரை அற்புதமாக படமெடுத்து தந்திருக்கிறார்.


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள அருமை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை மட்டுமே மனதில் நிற்கிறது.


வசனம் ஜெயமோகன். சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார். வியாபாரம் நடத்த என்னென்னவோ பண்றேன்டா.. சி. எம் பி.ஏ வரை கொட்டி அழறேன்டா என்று முதலாளி சொல்வதாகட்டும்.. அண்ணாச்சி ஏகப்பட்ட கேஸ் ஏற்கனவே பெண்டிங்ல இருக்கு என்று காவலதிகாரி சொல்வதாகட்டும். ஜெமோ டச் தெரிகிறது. மற்ற காட்சிகளின் வசனங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் பலம் சேர்ந்திருக்கும்.


மனித நேயமே இல்லாத முதலாளி மொபைலின் ரிங்டோன் கந்த சஷ்டி கவசம். அறையின் சுவரில் கிருபான்ந்த வாரியார் புகைப்படம். அவரிடம் மாதந்தோறும் வரிசையாக வந்து கையூட்டு பெறும் காவல், மாநகராட்சி அதிகாரிகள் என்று ஒவ்வொரு காட்சியமைப்பும் வீணாகாமல் மிளிர்கிறது.


குறைகளே இல்லையா என்று கேட்கலாம்..? முதல் பாதி கொஞ்சம் நீளுவது போல தெரிகிறது. வேறு சில பாத்திரங்களுக்கான கதையையும் சேர்த்திருக்கலாம். பாடல்களை குறைத்திருக்கலாம். But everything is negligible


வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம்.



கண்டிப்பாக பாருங்கள். Please don't miss.



அங்காடித் தெரு = அருமை + அற்புதம் + அனுபவம்.


Wednesday, February 24, 2010

தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்


தண்டோரா மணிஜியின் Cheers குறும்படம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக லிங்க் இங்கே. வேறு லிங்க் கிடைக்கவில்லை ஆனால் மிகுந்த நேரமெடுக்கிறது. பின்னூட்டத்தில் திட்ட கூடாது ஆமா சொல்லிபுட்டேன்.


Cheers பல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.சென்ற ஆண்டு தழிழ்ஸ்டுடியோ நடத்திய போட்டியிலும் பரிசை பெற்றது.


சில நாட்கள் முன் திருவாரூர் அரிமா சங்கமும் கிழக்கு வாசல் சிற்றிதழும் இணைந்து நடத்திய குறும்படம் போட்டியிலும் வென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. மணிஜிக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.


அந்த பரிசை பெறவும் நண்பர்களை சந்திக்கவும் அண்ணன் மணிஜியும் அன்பு நண்பன் அகநாழிகை வாசுதேவனும் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார்கள். நானும் செல்வதாக தான் இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இயலாதது வருத்தமே.




வாசுவையும் மணிஜி அவர்களையும் திருச்சி/ தஞ்சாவூர் முகாமில் சந்திக்க விரும்பும் நபர்கள், மணிஜியின் அர்த்தமில்லாத கதைகளுக்கு அர்த்தம் கேட்கலாம். அவரும் கொஞ்சம் பேசுவார்.


நிகழ்ச்சி விபரம்


குறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா

அமைப்பு: திருவாரூர் அரிமா சங்கம் + கிழக்குவாசல் சிற்றிதழ்

இடம்: திருச்சி அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்)

நாள்: 26/2/2010 (வெள்ளி கிழமை)

நேரம்: காலை 10.00 மணி

அலைபேசி: மணிஜி ( 9340089989)
அகநாழிகை வாசுதேவன் (9994541010)



வாருங்கள். வாழ்த்துங்கள்.




டிஸ்கி:
மைத்ரி தொடர்பான இடுகைக்கு ஆதரவும் நிதி திரட்டுவதில் உதவியும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அருமை சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.


Sunday, February 7, 2010

மைத்ரி







நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”


மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.


மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.




வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.




இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.




இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.







சென்னை நேரு உள்விளையாட்டஙகில்
(பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.




ஆன்லைனில் வாங்க
இங்கே கிளிக்கவும்.




நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள்
இங்கே செலுத்தலாம்.


இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளில் நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

Wednesday, January 13, 2010

சூரிய கதிர்




சில தினங்களுக்கு முன் சூரிய கதிர் இதழின் அலுவலகத்திலிருந்து ஒர் அவசர அழைப்பு. சினிமா சிறப்பிதழுக்காக உலக சினிமா பற்றி ஏதேனும் கட்டுரை எழுத முடியுமா என்றும் நேரில் வரும் படியும் அழைப்பு விடுத்தார்கள்.




நேரில் சென்று பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ராவ் அவர்களை சந்தித்தேன். எத்தனை பெரிய மனிதர் அத்தனை எளிமையாய் பேசி உங்கள் மனதுக்கு பிடித்ததை முதலில் செய்யுங்கள் என்றார்.




உலக சினிமா என்றாலே என்றும் என் மனம் கவர்ந்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியை பற்றி ஒரு முன்னோட்டமாக எழுதலாமா என்று கேட்டதற்கு உடனே சம்மதம் சொன்னார்.




அன்றே இரவோடு இரவாக எழுதியும் அனுப்பினேன்.



சூரிய கதிர் (ஜன 16 -31 ) இதழில் அச்சேறியிருக்கிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி.



காலையில் முதன் முதலில் பார்த்து விட்டு அலைபேசியில் வாழ்த்து சொன்ன உண்மைதமிழனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.





வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர் மரக்காணம் பாலாவுக்கும் நன்றிகள்.




அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.




டிஸ்கி: திரு. மதன் அவர்களும் எழுத்து சித்தர் பாலகுமாரனும் தொடர் எழுதும் பத்திரிகையில் அடியேனும் கட்டுரை எழுதியிருப்பது எனக்கு நிஜமாகவே Happy Pongal தான். இணையத்தில் படிக்க இங்கே

Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...


நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.



இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.



முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.



பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.



பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}



புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.





கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.


பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.



காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.



ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.



டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.