Thursday, December 17, 2009

உலகெங்கும் தெரியப்போகும் வார்த்தை




டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'.


நாளை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.



இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.



ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.




தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.


தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.


டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.
டிஸ்கி: நாளை தமிழ் சினிமா உலகில் வேறு ஒரு அதிர்வும் நிகழ போகிறது. புயல் அபாயம் காரணமாக விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
செய்தி நன்றி: தட்ஸ் தமிழ்.

Monday, December 7, 2009

இயக்குநர் சேரனுடன் ...நான்..





மூன்று வாரங்களுக்கு முன் இயக்குநர் சேரனிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. எனது உலக சினிமா வலைப்பூ பற்றி ஆர்வமாக பேசி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார். எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி. பின்பு அடிக்கடி பேசியும் பகிர்ந்தும் கொண்டிருந்தார்.




இன்று நேரில் சந்திக்க அழைக்கவும் செய்தார். சந்தித்தேன். முதலில் கேரள உலக திரைப்பட விழாவில் தேர்வாளராக நியமிக்க பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தேன். பின்னர் தமிழ் வணிக சினிமா, உலக சினிமா, இன்றைய சமூக சூழல், வலைப்பூக்கள், பிளாக்கர்ஸ் அவரது அடுத்த படைப்பு என்று ஒரு நீண்ட உரையாடல். அருமையான மாலை பொழுதாய் அமைந்தது.




தமிழ் சினிமாவின் அசுர வளர்ச்சியும் ஆனால் அது மொத்தம் வணிகம் சார்ந்ததாய் மாறி வருவதை குறிப்பிட்டார். உலக திரைப்படங்கள் மீதும் குறிப்பாக இரானிய திரைப்படங்கள் மீது அவருக்கு உள்ள ஆர்வமும் மதிப்பும் அளவற்றது. மஜித் மஜிதி, கிம் கி டக் பற்றி வியந்து பேசியதுடன் கொரிய திரைபப்டஙகளின் தொழி நுட்பங்களை சிலாகித்தார். கேரள திரைப்பட விழாவில் பங்கு பெறும் உலக படங்கள் குறித்து பல குறிப்புகளை கூறி அசத்தினார்.




பின்னர் வலைப்பூக்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் அவர் டென்ஷன் ஆகி விடுவாரோ..? என்று எனக்கு கொஞ்சம் உள்ளூற உதறல். ஆனால் மிக அமைதியாக அனைத்து வலைப்பூக்கள் பற்றி நிறைய பேசினார். எண்ணற்ற பிளாக்கர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சி என்றாலும் கட்டற்ற சுதந்திரத்தினால் சில வலைப்பூக்களால் சிலருக்கு வலிப்பூக்களாகியிருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிந்தது. எப்படியிருந்தாலும் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தார்.




தற்போது கேரள திரைப்படவிழாவிற்கு செல்வதாக சொன்னதால் புது வருடத்தில் {ஜனவரியில்} நேரம் ஒதுக்குமாறும் நமது மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டில் { பதிவர் சந்திப்பை தான் ஒரு பில்டப்பா மாநாடுன்னு சொல்றேன்} பங்கு கொள்ள வேண்டும என்று அனைத்து பதிவர்கள் சார்பாக அனுமதி கோரியுள்ளேன். விரைவில் நல்ல செய்தி வரும். காத்திருப்போம்.




அனைத்திற்கும் நன்றியும்
வாழ்த்தும் தெரிவித்து விடைபெற்றேன். பல நாள் பழகிய நண்பரை போல வாசல் வரை வந்து வழியனுப்பி மகிழவும் நெகிழவும் செய்து விட்டார்.






Monday, November 23, 2009

வாழ்த்துகள் பாண்டிராஜ்




"பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ்.



ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது.


இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.


அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார்.
விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


"முதல் படத்திலேயே சர்வதேச விருது வாங்கிய அனுபவம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த சசிகுமாருக்குதான் முதல் நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த அவருக்கும் இந்த விருதில் பங்குண்டு. சர்வதேச சினிமா ஜாம்பவான்கள் இருந்த அந்த சினிமா மேடையில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றதை எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.



இயக்குநர் நண்பர் பாண்டிராஜ் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...

Monday, October 5, 2009

இணைய நண்பர்களுக்கு எச்சரிக்கை



இணைய நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை என்று நேற்று மின்னஞ்சலில் வந்த செய்தி.



WARNING!

If you belong to FaceBook, Twitter, MySpace - any gathering place online.

DO NOT accept a friend request from Christopher Butterfield.

He is a Hacker.

Warn your friends list! If even ONE of your friends adds him as their friend, he will hack into your computer's ID and address.


PLEASE TELL EVERYONE!



மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


இது உண்மையா அல்லது வதந்தியா..?? விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.

Thursday, October 1, 2009

செட்டி நாட்டு சினிமா




உலக சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு கதைகள் படிக்கும் ஆர்வம் மிகவும் குறைந்து போனது. கதைகள் என்ன..?? வாசிக்கும் அனுபவமும் கூடத்தான்.


உடல் நிலை குறைவாக இருந்த அருமை நண்பர் உண்மைத்தமிழனை சந்திக்க போன போது இத படிச்சு பாருங்க.. நல்லாயிருக்கும் என்று சொல்லி பதிவர் சுப்பையா வாத்தியார் எழுதிய “செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்” புத்தகத்தை பரிந்துரைத்தார்.



முதலில் ஒரு கதையை படித்து பார்ப்போம் என்று ஆரம்மித்தவுடன் விறு விறுப்பு பற்றி கொண்டது. எளிய நடை, சிறந்த திறனாய்வு, சிரிக்கவும் சிந்திக்கவும் யதார்த்தமான எழுத்துகள் என அனைத்தும் அற்புதமாய் இருந்தது.




மொத்தம் 160 பக்கங்களில் 20 கதைகள். அனைத்தும் நகரத்தார் வாழ்கையின் பின்னணியில் எழுதப்பட்டது.



நகரத்தார் வீட்டு நிகழ்ச்சிகள், நடை முறைகள், பேச்சு வழக்குகள், அவர்களின் வாழ்வின் நிறை குறைகள் எல்லாம் நன்கு வெளிப்பட்டு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக கவியரசர் கண்ணதாசனின் பொருத்தமான பாடல்களை ஆங்காங்கே இட்டு அழகு செய்திருக்கிறார் நூலாசிரியர்.



நகரத்தார் பின்னணியில் எழுதப்பட்டாலும் கதைகள் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற வண்ணம் ஒன்றுகொன்று மிகவும் வித்தியாசமாய் தனித்தன்மையுடன் விறு விறுக்க வைக்கிறது. ஹைதாராபாத்தில் நிகழும் ஒர் கதையில் பேகம் பஜார், சுல்தான் பஜார், கோட்டி, கொத்த பெண்டையா கடை, புல்லா ரெட்டி ரஸமலாய் என்று ஹைதாராபாத்தின் முக்கிய பகுதிகளையும் புகழ் பெற்ற கடைகளையும் சிலாகித்து எழுதியதை படித்தவுடன் என் மூன்று வருட அருமையான ஹைதை வாழ்க்கையில் சிறிது நேரம் மூழ்கி போனேன்.



ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு ஊர்கள், நிகழ்வுகள், வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என்று தனது பாணியில் கலக்கியிருக்கிறார். பல ஊர்களுக்கு அவர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களா.? அல்லது அங்கு வாழ்ந்த உறவு தொடர்புகளின் ஈடுபாடா..?? அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்பு அதை எழுத்தில் சொல்லிய விதமும் மிக அருமையாய் இருக்கிறது. அவர் நன்கறிந்த ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கதையில் முழுமையாகவும் சிலவற்றில் சிறிது சிறிதாயும் சொல்லி வியக்க வைத்துள்ளார்.




”தந்தி மீனி ஆச்சி” என்ற சிறு கதையில் ஆச்சியை “தில்லான மோகனாம்பாள்” படத்தில் வரும மனோரமாவாகவும் ஆயா வீடு சிறுகதையில் ஆயாவை பாதகாணிகை படத்தில் வரும் M.V ராஜம்மாவாகவும், தீபாவளி பற்றிய ஒரு சிறுகதையில் நாயகியை சினேகாவும் சித்தரிக்க ஆரம்பித்தவுடன் படிக்கும் போதே நமது கற்பனையுடன் அந்தந்த கதாபாத்திரங்கள் காட்சியாய் மனதிரையில் ஒடச்செய்து நல்ல உத்தியை கையாண்டவிதம் ஒரு செட்டி நாட்டு சினிமாவை பார்த்த உணர்வை தந்தது. மண் வாசனை மட்டுமல்ல நல்ல மனித வாசனைகளின் அற்புத தொகுப்பாய் இருக்கிறது.

ஆனந்த விகடன் பாணியில் கதைகளுக்கு ஏற்ப சில ஒவியங்களை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அடுத்த தொகுப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய அருமையான புத்தகம்.


நூல் விபரம்:

ஆசிரியர்: SP.VR. சுப்பையா

பக்கங்கள் : 160

விலை : ரூபாய் 75

வெளியீடு: உமையாள் பதிப்பகம்

பழைய எண் 94 : புது எண் 14

சொர்ணாம்பிகா லே அவுட், ராம் நகர்

கோயம்புத்தூர் - 641 009.

அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்

18 / 171, பவளக்காரத் தெரு

மண்ணடி

சென்னை - 600001

தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்

19, கண்ணதாசன் சாலை

தி.நகர் சென்னை-600017

தொலைபேசி எண் - 24353742

Friday, September 25, 2009

பதிவர்களுக்காக பாப்கார்ன்


நர்சிம்:

ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.

ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.


உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.

மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்
.


=========================================================

லக்கிலுக் & அதிஷா



பத்திரிகையுலகில் புதிய அடி எடுத்து வைத்திருக்கும் நண்பர்கள் அதிஷாவுக்கும் லக்கிக்கும் அனைத்து பதிவர்கள் சார்பிலும் என் மனதார வாழ்த்துகள். இந்த புதிய தலைமுறை ஜெயிக்கட்டும்.
என்னதான் பதிவுலகில் சில அறிவு ஜீவிகள் கமலை தீட்டி தீர்தாலும் அவரது ஐம்பது ஆண்டு கால சாதனைகளை வியந்து “தி சண்டே இந்தியன்” கமலின் பிரத்யேக பேட்டி 50 Q + 50 A பாணியில் கொடுத்திருக்கிறது.

10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.

வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.

மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.


=============================================================

கேபிள் சங்கர்:



தொலைதூர கப்பலில் பயணிக்கும் பிரிட்டீஷ் மாலுமிகளுக்கு தினமும் காலை உணவு மதிய உணவு இரண்டுமே பழைய ரொட்டியும் தண்ணீரும் தான். சில சமயம் மட்டுமே ஒயின் அளிக்கப்படும்.

அதிர்ஷ்டம் இருந்தால் சில நாட்களில் மட்டும் மூன்றாவது தடவையாக சிறிது மாமிசத்துடன் சதுரமான தட்டில் வைத்து உணவு அளிக்கப்படும். தட்டின் வடிவத்தால் அதை ஸ்கொயர் மீல் என்றார்கள். அதுவும் ஒருவருக்கு தேவையான அளவில் போதுமானதாக இருக்கும். Three squares என்பது தினமும் மூன்று வேளை கலந்து கட்டி அடிப்பது. அதை நணபர் நல்லா செய்வார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

==================================

உண்மைத்தமிழன்


பல நூறு ஆண்டுகளுக்கு முன் செயின்ட் அகஸ்டின் ரோமுக்கு மத விஷயமாக செயிண்ட் அம்ப்ரோஸ் என்பவரை அனுப்பினார். அவருடைய பழக்கம் வாரத்தில் சில நாட்கள் உபவாசம் இருப்பது. ஆனால் ரோமிலோ வேறு நாட்களில் உபவாசம் இருந்தனர். அம்ப்ரோஸ் குழப்பமானார். உடனே செயிண்ட் அகஸ்டினை தொடர்பு கொண்டார். அகஸ்டின் கூறிய அறிவுரை தான் “ரோமில் இருக்கும் போது ரோமாபுரியினர் செய்வது போல் செய்” என்பது இன்றும் வழக்கத்தில் இருக்கும் சொல்லாகும். அண்ணன் உண்மைதமிழனும் அடிக்கடி சரியாக சாப்பிடுவதில்லை. ஊரோடு ஒத்துபோவதுமில்லை சின்ன பதிவும் எழுதுவதில்லை என்பது தான் என் சிறிய வருத்தம்.

=====================================================

தண்டோரா:



காக்டெயில் என்பது அண்ணன் தண்டோராவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயர் என்படி வந்தது. கி.மு 3000 ஆண்டிலேயே காக்டெயில் இருந்திருக்கிறது. ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடையில் டைக்ரீஸ் ஆற்றின் கரைக்கு அடியில் டெர்ரகோடா பானைகள் அகழ்வாய்ச்சியாளர்களால் ஒரு சமயம் கண்டுபிடிக்கபட்டது. அப்பானைகளில் புளிக்கவைத்த பார்லி, தேன், ஆப்பிள்களின் சுவடுகளும் கண்டெடுக்கப்பது. So, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் சும்மா கலக்கி அடித்திருக்கிறான். டாஸ்மாக்கெல்லாம் சும்மா ஜீஜிபி தான்.


===============================================

டாக்டர் தேவன்மாயம்:



டாக்டர் தேவன் மட்டுமல்ல அனைத்து மருத்துவர்களும் எழுத படும் மருந்து சீட்டில் Rx என்று பார்த்திருப்பீர்கள். இது என்ன Rx..??

உயிர் காக்கும் மருத்துவம் தொழில் மட்டுமல்லாது கடவுளுக்கு நிகரானவர்களாக மருத்துவர்களை ஜீபிடர் கடவுளுக்கு பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள்.

R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. அதாவது இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் எனபதாகும். சின்ன x கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும் அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம்.இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.
மதுரையில் சந்தித்த டாக்டர் தேவன் பழகுவதற்கும் இனிமையானவர். தொலைபேசியிலும் அடிக்கடி பேசுவார். ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.


நீங்கள் ஆதரவளித்தால் பதிவர்களுக்கான பாப்கார்ன் தொடரும்.

Thursday, September 17, 2009

உன்னை போல் ஒருவன்







20 வருடமாக விடாது கடைபிடித்து வரும் First Day.. First Show.. விரதம் கலைந்து விடுமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் பார்க்கும் வாய்ப்பு முதல் நாள் இரவே கிடைத்தது. நானும் நண்பர் தண்டோராவும் சென்றிருந்தோம்.


வெட்னஸ்டே இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் என் மதிப்பிற்குரிய கமல் + மோகன்லால் என்ற புதிய கூட்டணியால் ஆவல் அதிகமாகியது.


தீவிரவாதத்தை ஒரு சாதாரண குடிமகன் எப்படி எதிர்க்க முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தி படம் நகர ஆரம்பிக்கிறது.


“உங்க சிட்டியில ஆறு இடத்தில RDX வெடிகுண்டு வெச்சிருக்கேன்” என்ற போன் கால் வந்ததும் நகர கமிஷனரான மோகன்லால் என்ற அற்புத நடிகரின் நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு விறு விறுப்பும் ஆரம்பமாகிறது.


குண்டு வெடித்ததா..?? எதற்காக ஒருவன் குண்டு வைக்கிறான்..?? அவன் தீவிரவாதியா..?? அவன் பெயரென்ன..?? அவனது கோரிக்கைகள் என்ன..? அவை நிறைவேறியதா..?? என்பதற்கு தியேட்டரில் படத்தை கண்டிப்பாக பாருங்கள்.


Quick points (In nutshell)


  • மோகன்லாலின் அற்புத நடிப்பு

  • இரா.முருகன் வசனம்

  • துணை நடிகர்கள் தேர்வு (குறிப்பாக இரண்டு காவல் துறை அதிகாரிகள்)

  • ஓளிப்பதிவு

  • ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்

  • விறுவிறுப்பான திரைக்கதை

  • படத்தின் நீளம் (மொத்தம் 50 +50 நிமிடங்கள் மட்டுமே.. அப்பாடா இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்திருந்தேன்)


எனக்கு பட்ட குறைகள்:

  • பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)
  • பின்னணி இசையில் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்காலாம்.
  • முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?

இவையெல்லாம் Trifling தான். (அதுக்கு தான் சின்ன font)

உன்னை போல் ஒருவன் = Just watch and simply enjoy..