Friday, March 26, 2010

அங்காடித் தெரு.....






படம் முடிந்துவிட்டாலும், மிஷ்கினின் நந்தலாலாவை கிடப்பில் போட்ட மாதிரிதான், இந்தப் படத்தையும் மூலையில் போட்டு வைத்திருந்தார்கள ஐங்கரன் தயாரிப்பாளர்கள். காரணம் வரிசையாக அவர்களுக்கு விழுந்த அடி அப்படி..



நல்லவேளை பல மாதங்களாக எதிர்பார்த்த திரைப்படம் இப்போதுதாவது வெளியானது.



வெயில் பட இயக்குநர் என்பதாலும் வித்தியாசமான கதையை சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் சென்றேன். வசனம் ஜெயமோகன் Additional advantage. நம்பிக்கை வீண் போகவில்லை.


மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன் எப்போதும் பரப்பரப்பாகவும் பகட்டாகவும் இயங்கி கொண்டிருக்கும் ரங்கநாதன் தெரு. அதில் உள்ள மிரும்மாண்ட ஜவுளி மாளிகை செந்தில் முருகன் ஸ்டோர் என்று பெயர் பலகையுடன் காட்சியளிக்கும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவே கதைக்களம்.


ஆனால் அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை உரித்து ரங்கநாதன் தெருவிலேயே தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். அதற்கே முதலில் ராயல் சல்யூட்.



பள்ளியில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தந்தையின் அகால ம்ரணமும் குடும்ப சூழ்நிலையால் சென்னையில் வேலைக்கு வருகிறான் நாயகன். அவனுடன் சேர்ந்து கொண்டு கூடவே வரும் இன்னொரு நண்பன் (கனாகாலங்கள் தொலைகாட்சி தொடரில் நடித்த பாண்டி)


ஆடையில் படிந்த கறை போல கனவுகளை சுமந்து வரும் நாயகனுக்கு அங்கு வேலை பார்க்கும் பெண்ணுடன் காதல். அவர்கள் இருவரின் சிநேகம், காதல், இன்பம், சோகம், என்று ஒவ்வொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.


விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எப்படியெல்லாம் சென்னையை நோக்கி ஒடி வரும் கிராமத்தவர்களின் வாழ்க்கையில் அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதுடன் இருவரும் காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்தார்களே எனபதே மீதி கதை..


உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாய் பேசினாலே அடி என்று கொத்தடிமைகளாய் நடத்தாத குறையாய் முதலாளியும் மானேஜரும்.


கடுமையான வேலை நேரமில்லாத உழைப்பு சரியான உணவோ கழிப்பிட வசதிகள் கூட இல்லாத அறைகள் என்று மிக துல்லியமாக பதிவாக்கியிருக்கிறார்.


ஒரு காட்சியில் பாண்டி Dubai என்று போட்ட டி. ஷர்ட் அணிந்து வருகிறான். கட்டிட வேலைக்காக செல்லும் கடல் கடந்து செல்லும் அமீரக இந்தியர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமாக எனக்கு தோன்றியது. அமீரக நண்பர்களுக்கு இது நன்கு புரியும்.



மானேஜராக நடித்திருப்பது இயக்குநர் வெங்கடேஷ். அற்புதமான நடிப்பு. செவத்த மூதிகளாக என்று திட்டி கொண்டே வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை பலப்படுத்துகிறார்.


முதலாளியாக பழ.கருப்பையா.. இயக்குநர் மணிரத்னம் அக்னி நட்சத்திரத்தில் உமாபதியை தேர்ந்தெடுத்தது போன்று மிகச்சிறந்த தேர்வு.


நாயகன் அறிமுகம் மகேஷ். பாதி காதல் பரத் போலவும் கொஞ்சம் கல்லூரி திரைப்படத்தில் நடித்த பையனையும் போலவும் இருக்கிறார். நடிப்பு அருமை. கதாநாயகியாக அஞ்சலி மற்றும் உடன் நடிக்கும் சிறு சிறு பாத்திரங்கள் அனைவரும் யதார்த்தமான நடிப்பால் கவருகின்றனர். இயக்குநர் நன்கு வேலை வாங்கி இருப்பது தெரிகிறது.


அஞ்சலி உடம்பால் நடிக்காமல் கண்களாலேயே நடித்து கவருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் ரேவதி, நதியா வரிசையில் நிச்சயம் இடமுண்டு.


ஒளிப்பதிவு ரிச்சர்ட். அமைதியான கிராமிய சூழ்நிலையிலிருந்து படபடக்கும் ரங்கநாதன் தெருவரை அற்புதமாக படமெடுத்து தந்திருக்கிறார்.


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள அருமை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை மட்டுமே மனதில் நிற்கிறது.


வசனம் ஜெயமோகன். சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார். வியாபாரம் நடத்த என்னென்னவோ பண்றேன்டா.. சி. எம் பி.ஏ வரை கொட்டி அழறேன்டா என்று முதலாளி சொல்வதாகட்டும்.. அண்ணாச்சி ஏகப்பட்ட கேஸ் ஏற்கனவே பெண்டிங்ல இருக்கு என்று காவலதிகாரி சொல்வதாகட்டும். ஜெமோ டச் தெரிகிறது. மற்ற காட்சிகளின் வசனங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் பலம் சேர்ந்திருக்கும்.


மனித நேயமே இல்லாத முதலாளி மொபைலின் ரிங்டோன் கந்த சஷ்டி கவசம். அறையின் சுவரில் கிருபான்ந்த வாரியார் புகைப்படம். அவரிடம் மாதந்தோறும் வரிசையாக வந்து கையூட்டு பெறும் காவல், மாநகராட்சி அதிகாரிகள் என்று ஒவ்வொரு காட்சியமைப்பும் வீணாகாமல் மிளிர்கிறது.


குறைகளே இல்லையா என்று கேட்கலாம்..? முதல் பாதி கொஞ்சம் நீளுவது போல தெரிகிறது. வேறு சில பாத்திரங்களுக்கான கதையையும் சேர்த்திருக்கலாம். பாடல்களை குறைத்திருக்கலாம். But everything is negligible


வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம்.



கண்டிப்பாக பாருங்கள். Please don't miss.



அங்காடித் தெரு = அருமை + அற்புதம் + அனுபவம்.